Kannaadi
இத்தனை காலமாய்எங்கு இருந்தது
இந்த முகம்?
கண்டு பல காலம் கடந்துவிட்டதே
அத்தனை நாட்களும்
முகமில்லாமல் அலைந்தேனா?
பிரதிபலிப்பு
புகைமூட்டமாய் இருந்தே!
ஃ
இன்று, ஒளிர்கின்றதே
மின்னும் தாரகைகளாய் விழிகள்
பவழங்களாய் ஜொலிக்கும் இதழ்கள்!
இது என் முகம்தானா?
சொல் கண்ணாடியே
ஏன் ஒளித்தாய் என்னை?
ஃ
தினமும் தான் பார்க்கின்றாய்
சில பயங்களோடு
துளி புன்னகையோடு
பெரிய ஏக்கங்களோடு
சிறிய நம்பிக்கையோடு
அத்தனையும் அப்பட்டமாய்
அவிழ்த்துவிடும் உன் விழி!
ஃ
நானோ... வெறும் பிம்பம்.
நீ காண
விரும்புவதைத் தான்
நான் காட்டிவந்தேன்.
இது நான் ரசிக்கும் நித்திய அழகு!
இன்றுதான் நீ
உண்மை உணர்ந்திருக்கிறாய்!
சிரிக்கின்றனவே கண்கள்!
கன்னத்தில் ஒரு ரோஜா
பூத்திருக்கிறதே...!
பார்!
- கற்பகம் இளங்கோவன்.
மார்ச் 01 - 2006

0 Comments:
Post a Comment
<< Home