Vasantham - 2006

வருகின்றாள் வசந்தமகள் !
வஞ்சி இடையில்
வண்ணக் குடங்கள் தாங்கி
மிஞ்சும் எழிலை
கொஞ்சம் கொஞ்சமாய்
தெளித்து,
வருகின்றாள் வசந்தமகள்!
பூவிதழ் பாதம்
பனிபாளங்களில் பாவ
அவளது இளமையின்
பசுமை புல்வெளிகளிலே
பரவிடுதோ!
மொட்டுத் தேனிதழால்
சொட்டும் காதலுடன்
பட்டச் செடி கொடிகளின்
நெற்றியிலே முத்தம் பதிக்க
சின்ன முகங்கள்
மலர்கின்றனவோ!
வருகின்றாள் வசந்தமகள்!
உறங்கிய சூரியனின்
கனவில் தோன்றி
நீள் விழி கொண்டு, என்ன
மோகனம் புரிந்தாளோ?
கிறங்கிய கதிரவன்
விழித்துக் கொண்டான்!
ஒளிக் கிரணங்களால்
தழுவிக்கொள்ள
தாவுகின்றான்!
இவள் நழுவுகின்றாள்!
குருவிகளோடு
குறும்புகள் செய்யவேண்டாமா?
வருகின்றாள் வசந்தமகள்!
குளிர் போனது
வா கண்ணாமுச்சி
விளையாடலாம். என்று -
வண்ணத்துப் பூச்சிகளையும்
வம்புக்கு இழுக்கின்றாள்.
நங்கை தம்மில்
நனைந்திடுவாளோ
இறுக்கத்தில் உறைந்த
குள மேனியரோ
இளகி அழைக்கின்றனர்.
வருகின்றாள் வசந்தமகள்!
கதிரவனும் குருவியும்
குளிர் காலம் மறந்தன!
காரில் போகும் காரியத்தாரே!
வருகின்றாள் வசந்தமகள்!
இதய வாசல்களைத்
திறந்து வையுங்கள்
வரவேற்க.
வருகின்றாள் வசந்தமகள்!

0 Comments:
Post a Comment
<< Home